Print this page

கபடநாடகக் கடவுள் - சித்திரபுத்திரன். குடி அரசு - கட்டுரை - 03.09.1933 

Rate this item
(0 votes)

தோழர் காந்தியவர்கள் ஒவ்வொரு விஷயத்தையும் கடவுள் கட் டளைப்படி செய்வதாகச் சொல்லி வருவது யாவரும் அறிந்ததாகும். பலர் அதை உண்மையென்று நம்பியும் வருகிறார்கள். ஏன் அந்தப்படி இருக்கக் கூடாது என்று வாதமும் பேசுகிறார்கள். தோழர் காந்தியவர்கள் ஏர்வாடா சிறையில் சென்றவாரம் இருந்தகாலத்தில் ஹரிஜனங்களுக்கு வேலை செய்ய சகல சௌகர்யங்களும் சர்க்கார் தனக்கு அளிக்காவிட்டால் பட்டினிகிடக்க வேண்டுமென்று கடவுள் கட்டளை இட்டதாகச் சொல்லி பட்டினி இருந்தார். சர்க்காரை எந்தவிதமான தனி சுதந்திரமும் கடவுள் கேட்க வேண்டாம் என்று சொன்னார் என்று, வேண்டியதில்லை என்றார். பிறகு ஹரிஜன சேவை செய்ய கடவுள் சொல்லுகின்றார் என்று சொல்லி சில சுதந்திரம் கேட்டார். சர்க்கார் சில சௌகரியங்கள் கொடுத்திருப்பதாகத் தெரிவித்தவுடன் பட்டினியை நிறுத்தும் படி கடவுள் கட்டளையிட்டதின் பிரகாரம் பட்டி னியை நிறுத்திவிட்டதாக சர்க்காருக்கு வாக்கு கொடுத்துவிட்டார். பிறகு மாலையில் கடவுள் அந்த வாக்கை நிறைவேற்ற முடியாமல் மறுபடியும் காந்தியாரைப் பட்டினி கிடக்கும்படி செய்ததுமாத்திரமல்லாமல் காந்தி யாரை மன்னிப்புக்கேட்கும்படியும் செய்து விட்டார். 

கடவுளின் இந்தமாதிரியான வாக்குத்தவருதலானது அனாவசியமாய் காந்தியார் தலையில் பழிவிழுந்து மன்னிப்பும் கேட்டுக்கொள்ளச் செய்த தென்றால் கடவுளின் யோக்கியப்பொருப்பற்ற தன்மைக்கு வேறு ருஜு வேண்டுமா? எது எப்படியானால்தான் என்ன எவ்வளவு வாக்குத் தவறுதல் கள் ஏற்பட்டால்தான் என்ன யார் எவ்வளவு மன்னிப்புக்கேட்டுக் கொண் டால்தான் என்ன முடிவில் காரியம் கைகூடவேண்டியது தானே புத்தி சாலித்தனமான லட்சியமாகும். ஆதலால் கடவுள் தனது பக்தனாகிய காந்தி யாரை விடுதலை செய்விப்பதற்காக என்ன என்ன எல்லாம் செய்ய வேண்டுமோ அதைச் செய்யவேண்டியது தான் கடமையாகும். அதிலும் "கபட நாடக சூஸ்தரதாரி யாகிய கடவுள்” என்னதான் ஏன்தான் செய்ய மாட்டார். "கடவுள் செயலைப் பற்றிப் பேச எவருக்கும் யோக்கியதையும், உரிமையும் இல்லை ” ஆதலால் நாம் இதுபேசியதுகூட அதிகப்பிரசங்கித் தனமென்று இப்பொழுது கருதுவ தால் மன்னிப்பு கேட்டுக்கொள்ள வேண்டியதுதான். 

குடி அரசு - கட்டுரை - 03.09.1933

 
Read 102 times